Tuesday, October 27, 2009

இரத்த உறிஞ்சிகள்


வியர்வை சிந்தி
உழைத்த பணம்
சிரிப்புடன்
வட்டி முதலையின்
பையில்

Tuesday, October 13, 2009

தீபாவளி நினைவலைகள்

தீபாவளி தீபாவளி
திருநாள்
அதோ வருகிறது பார்
கோழிக்கறி அங்கே
இட்டிலியும் இங்கே
சுவைத்து சுவைத்து
சாப்பிடலாம் வா”

அன்று தோட்டப்புறங்களிலும் கிராமங்களிலும் குழந்தைகளும் இளைஞர்களும் பெரியோர்களும் தீபாவளி காலங்களில் உதிர்த்த வசனங்களை நினத்துப்பார்க்கின்றேன்.
எத்துணை சுகம்!

தீபாவளிக்கு சட்டை வாங்கியாச்சா ?
ஒரு உடுப்புதான் அப்பா வாங்கினாரு....
இன்னைக்குப் போய் எங்க தங்கைச்சிக்கு,அண்ணனுக்கு,அக்காவுக்கு வாங்குவாரு!



பட்டாசு நேத்திக்கு கொஞ்சம் வாங்கிட்டோம்
தீபாவளிக்கு முத நாளு முச்சந்தி கடையிலே ரொம்ப வாங்கலாம்னு அப்பா சொன்னாரு.

அப்பா வாங்கின 007 சட்டை சின்னதா இருக்கு..
அப்புறம் போய் மாத்தணும்

டேய் இராமசாமி உங்க அப்பாகிட்ட சொல்லு.. கந்தாயி மாமாவுக்கு
இந்த ஆட்டை கூறு போடும்போது மூணு கூறு கேட்டாருன்னு சொல்லு.
தொடைபகுதியா வேணும்னு சொல்லு.
அப்புறம் காசு தருவாருன்னு சொல்லு. சரியா....அவருக்குத் தெரியும்
சரி...சரி....சொல்றேன்

டேய் எம்.ஜி.ஆர்,சிவாஜி இரண்டும் படம் ஓடுது.எதற்குடா போறே ?
முத நாளு எம்.ஜி ஆர். படம்.அப்புறம் சிவாஜி படம்.
அடுத்த நாள் கோலாலம்பூருக்கு போய் அங்க ஒரு படம் பார்க்கலாம்.
கண்ணாவையும் கேளுடா வந்தா எல்லாரும் போலாம்.

தீபாவளிக்கு காலையிலேயே வந்துடு.நம்ம வீட்லேதான் பசியாற.அப்புறம் உன் வீடு.முடிஞ்சதும் குப்பு வீட்டுக்குன்னு ஒரு வட்டம் போடலாம். மறந்திடாதே

இன்னும் ஒரு நாள்தான் இருக்கு தீபாவளிக்கு.பிள்ளைகளுக்கு இன்னும் ஒரு உடுப்புகூட வாங்கலே.கடைக்கார்கிட்ட கைமாத்தா நூறு வெள்ளி வாங்கிட்டு வர்ரேன் புள்ளே.அப்புறம் கொடுக்கலாம். (தந்தையின் தவிப்பு)

தீபாவளி வந்துட்டா போதும்.இவங்க தொல்லை தாங்கலே.

வெடிடா நல்லா வெடிடா பேய் பிசாசு எல்லாம் ஓடுணும்.
பக்கத்துலே கேக்கிற சத்தத்தைவிட ரொம்ப சத்தம் வரணும்

தீபாவளிக் கார்ட்டெல்லாம் ஒட்டுங்கடா.டேய் மாமாவோட கார்டை மேலே ஒட்டுங்க.இல்லேனா மாமா வந்தா பார்த்துட்டு ஏசுவாரு.
இந்த வருஷம் கார்டு குறஞ்சிருக்கு.ஏண்டா......

அனுப்பின எல்லோருக்கும் கார்டு அனுப்பிட்டிங்களா. நாளைக்கு ஒரு சொல்லு வராதபடி பார்த்துக்கொங்க.

ஏண்டி லட்சுமி இப்போ போய் சொல்ற ..தம்பியை கூப்பிடு.டேய் விக்கி கடை தொறந்து இருந்தா ஒரு கா கட்டி மிளகா தூள் வாங்கிட்டு வா.அப்பா பேரை சொல்லு.

சொல்லிட்டேன் ..சொல்லிட்டேன் கவலைப்படாதே.உங்க அப்பா கண்டிப்பா பித்தளைச் சங்கிலி வாங்கிட்டு வந்திடுவாரு.நாளைக்குத்தானே தீபாவளி.
முதலே சீயக்காய் சவர்க்காரம் எடுத்து மூலையிலே வை.

பலகாரத்தை சாப்பிடாதிங்க. முதல்ல சாமிக்கு படையல் போடணும்.டேய்..டேய் சொன்னா கேக்க மாட்டிங்களே !நீயும் அப்படித்தான் உங்க அக்காவும் அப்படித்தான்

அம்மா...கண்ணு எரியுதம்மா..போதும்மா..தண்ணி ஊத்துங்கம்மா....
நல்லா எண்ணே தேச்சு குளிக்கணும்டா....


நான் மறந்துவிட்டதை நீங்கள் நினைவு கூறுங்களேன்.மகிழ்வோம்.
தீபாவளி வாழ்த்துகள்


(இப்பொழுது நாகரிகச் சூழலில் சுகமான இந்த வசனங்கள் மறைந்து சிக்கனம் என்ற போர்வையில் மகிழ்ச்சி போலி நடனம் ஆடுகின்றது)