Friday, July 24, 2009

நெஞ்சு வலிக்குதய்யா



(வயது முதிர் காலத்தில்
பிள்ளைகள் நலம் வாழ
பிரார்த்திக்கும் பாசமுள்ள
தந்தையின் கண்ணீர்த் துளி
காணிக்கை)



பிள்ளைகளின்
திருமணத்திற்குப் பின்
கடமை முடிந்து போன
மகிழ்ச்சி -
பெற்றோர் பெருமூச்சு

'இனிமேல்தான்
நிம்மதி இல்லை'
அனுபவசாலியின்
அன்புக்கூற்று
ஏற்க மறுத்து
ஏளனமாக
சிரித்தேன் - அன்று

உண்மைதான்
உணர்கின்றேன் - இன்று

வயது ஆறோ
ஆறு ஐந்து முப்பதோ
குழந்தைகள்
என்றும் நம்
பிள்ளைகள்தான்

வயது முதிர் காலத்தில்
தாங்கும் வலிமை
குறைந்த வேளையில்

பிள்ளைகள் சிரிப்பு
நம் ஆயுள் வாழ்வின்
நாள் நீடிப்பு
அவர்கள் சோகம்
நம் நாள் குறைப்பு

குழந்தைகளின்
சிரிப்பில்
பட்ட கடன்
தெரியவில்லை - அன்று

பிள்ளைகளின்
சோகத்தில்
மனவேதனை
தாங்கவில்லை - இன்று

சிறு சோதனையில் கூட
சோர்வு, மன உளைச்சல்

சிரிக்க மாட்டார்களா
ஏங்குகிறது மனம்
சிரிப்பதைப் போல்
நடிக்கும் பாசப்பறவைகள்
அதுவும் புரிகின்றது

நானும்
அழுது கொண்டே
சிரிக்கின்றேன்

இன்னும் எத்துணை
நாட்களுக்கு................

ஓ இறைவா...............
நெஞ்சு வலிக்குதய்யா

பிள்ளைகளை
மகிழ்வோடு
வாழ வழி செய்
வாழ விடு

உமக்கு
காணிக்கையாக
உதிரப்போகும்
என்னை
ஏற்றுக்கொள்
என்றும் தயார்

கண்ணீருடன்..

Thursday, July 23, 2009

பிணமாகும் நாம்..




பிணமாகும் நாம்
புரிந்தும்
புரியாதவர்போல்
பணத்தைத் தேடி
போராடுவதாக
நினைத்து
நடைப்பிணமாய்
அலையும் நாட்களே
இன்றைய
மனித வாழ்க்கை

நமக்குப் பின்
நம் அடிச்சுவடு
நம்மை
நினைவுப் படுத்தலே
என்றும் நிலைக்கும்
வாழ்க்கை - யோசி

Tuesday, July 14, 2009

சிலந்தி வலை


இளைஞனே
ஒன்றும் தெரியாத
புரியாத ஈக்கள்
மாட்டிக்கொண்ட இடம்
சிலந்தி வலை
மாற்று பெயர்
நா.............................
கண்ணதாசனிடம்
இரவல் வாங்கிய வரிகள்
உமக்கும் பொருந்தும்
நாளை நீ மாறுவாய்
என்னை நினைப்பாய்.
இது உறுதி.

ஓர் இடுகையில்
ஆரம்பக் கால ஆசிரியரை
'இடி அமீன் வாத்தி'என
நினைவு கூர்ந்தார்
பட்டதாரி எழுத்தாளர்
இதுவா பண்பு
இதுவா நன்றிக்கடன்
வலைபகுதியில்
எப்படி வேண்டுமானாலும்
எழுதலாமா

அறிவுப் பசிக்கு
கண்களைத் திறந்த
ஆசிரியருக்கு
மரியாதைக் கொடுங்கள்
படித்த பட்டதாரி
எழுத்தாளர்களே

நம் சமுதாயக்
மூட நம்பிக்கைகளைப்
பற்றி பெரியார்
சொல்லாததா நீர்
சொல்லிவிடப் போகின்றாய்

ஆயினும் சொல்வதை
இனியச் சொற்களால்
சொல்லுங்களேன்
இனிய எழுத்தாளர்களே

Monday, June 15, 2009

தாலி தேவையா.. ? (கற்பனையல்ல..)

இருபத்தைந்து வயது இளைஞன். நல்ல பண்பாளன்.நிறைய கதைப் புத்தகங்களையும் நாவல்களையும் படித்தவன்.

என்னுடன் பேசிக்கொண்டிருந்தான்.
"தாலி தேவையா..? தாலி கட்டாமல் வாழ முடியாதா ?
இந்து மதம் எனக்குப் பிடிக்காத மதம். மதமின்றி மனிதனாக வாழ வேண்டும்" என வயதிற்கு முதிர்ந்த விவாதத்தில் ஈடுபட்டான்.
நான் அதிர்ந்து போனேன்.இருப்பினும் இயன்ற மட்டும் இளைஞனைத் திருப்தி படுத்த விளக்கம் கொடுத்தேன்.நிறைவு பெறாமலே இளைஞன் சென்றுவிட்டான்.

யோசிக்கின்றேன்.

இவரைப் போல் சிந்தனையுடைய சில இளைஞர்களுக்கு
யார் மனதையும் புண்படுத்தாத வகையில்
நல்லதொரு தெளிவான விளக்கத்தை ஆன்மீகவாளர்கள்,சிந்தனையாளர்கள் பதில் கூற விரும்பினால் சிறப்பு.

எதிர்ப்பார்க்கின்றேன்..

Thursday, June 11, 2009

பணம்

கையில்
காசில்லை
என் நிழல் கூட
மதிக்காமல்
என்னை விட்டு
தனியாக
ஓடியது

Tuesday, June 9, 2009

அறமே நீயுமா ?

சூரியன் ஒளி தர
மன்னர் ஆட்சி புரிய
மலை நடு வயலில்
இராகம் அசை போட
பசு ஓய்வின்றி உழைக்க
பயிர்கள் செழித்தோங்க
இதுவரை சரி - உள்ளே

வேலியே பயிரை மேய
வேங்கை மானை விரட்ட
உழைப்போர் ஒதுக்கப் பட
அறமே அலை மோத
சூன்ய மைய சூழலை
மாற்றுவோர் யார் ?